ஶ்ரீ மாத்ரே நமஹ:
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளல் பெருமானின் வாக்கினை சிரமேற் கொண்டு நமது ஸ்ரீ பாலா அறக்கட்டளை அன்னை லலிதையின் அருளோடு ஏழை எளியோரின் பசிப்பிணியை போக்கும் உயர்ந்த நோக்கத்தோடு அன்னதான சேவையை தொடர்ந்து செய்து வருகிறது. உலகின் மிகக் கொடிய நோய் என பெரியோர் குறிப்பிடும் இந்த பசிப்பிணியினை போக்கும் உயர்ந்த மனநிலை நம் ஒவ்வொருவருள்ளும் தோன்ற வேண்டும். பசி என்பது அனைத்து உயிர்களுக்கும் பொதுவான ஒன்று. நம்மால் இயன்ற சிறு சிறு சேவையின் மூலம் பிறரின் பசியை போக்க முடியும். நாம் தினமும் ஏதாவது ஒரு உயிரின் பசியை போக்குவோம் என்ற மனநிலையை திடமாகக் கொண்டு செயல்படுத்துவோமானால் இறைவனே விரும்பி நமை காப்பான். தினமும் காலையில் சிறு சிறு உயிர்களுக்கு தானியங்கள் அளிப்பது, நம் உணவு பண்டங்களில் சிறு அளவினில் ஒரு பெரிய பாண்டத்தில் சேகரித்து அது நிறைந்தவுடன் அதனை தானமாக் கொடுப்பது என எத்தனையோ வழிகளில் நாம் அன்னதானம் செய்ய முடியும். அடுத்தவர் பசியின் வழியினை அறிய நாம் நம் பசியினை உணர்ந்தாலே போதும்.
“தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை எரித்திடுவோம்” என்றான் பாரதி. நாம் அதனை நம் ஸ்ரீ பாலா அறக்கட்டளையின் ஓர் தாரக மந்திரமாகக் கொண்டு அன்னை பாலையின் அன்போடு இந்த அன்னதான சேவையை செய்து வருகிறோம். தானத்தில் சிறந்த தனமாகிய இந்த அன்னதான சேவையில் பங்கு கொள்வதன் மூலம் நாமும் இறையருளைப் பெற்று நம் சந்ததிகளுக்கும் நன்மைகளை சேர்ப்போம்.
பிற உயிர்களையும் நம் உயிராய் மதிப்போம்.